கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில், சினிமா பட பாணியில் ஒரு நகைச்சுவையான அதேசமயம் விசித்திரமான திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருடச் சென்ற வீட்டில் நகைகளையும் பணத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, போதை தலைக்கேறியதால் அங்கேயே உறங்கிப்போன கொள்ளையனை, வீட்டின் உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
கௌரிபிதனூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஹைதராபாத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கியுள்ளனர். பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் என அனைத்தையும் கொள்ளையடித்து மூட்டை கட்டியுள்ளனர். ஆனால், கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரான தேவராஜ் என்பவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பிரேம்நாத், கதவை திறந்து உள்ளே சென்றபோது கண்ட காட்சி அவரை உறைய வைத்தது. வீட்டின் நடுவே ஒரு நபர் போர்வையை போர்த்திக்கொண்டு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த பிரேம்நாத், அந்த நபரைத் தட்டி எழுப்பியுள்ளார். தூக்கக் கலக்கத்தில் இருந்த அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே, சந்தேகமடைந்து பீரோவை பார்த்தபோதுதான் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த திருடனைப் பிடித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
காவல்துறை விசாரணையில், பிடிபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பது உறுதியானது. கொள்ளையடித்த பிறகு போதை அதிகமாகி, சோர்வில் அங்கேயே உறங்கிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவருடன் வந்த மற்றொரு நபர், சில நகைகளுடன் தப்பியோடிவிட்டார். தூக்கத்தால் போலீசில் சிக்கிய தேவராஜை கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய அவரது கூட்டாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.



