சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ நாட்டில் பெருமை சேர்க்கும் வகையில் பரிசுகளை வெல்ல உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்.. திமுகவின் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாடு விளையாட்டு துறையின் பொற்காலமாக இருக்கிறது.. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் இடத்தில் தமிழ்நாடு உள்ளது..
கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு எல்லா துறைகளில் எப்படிப்பட்ட உயரங்களை அடைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.. அதனால் தான் நாட்டிலேயே பொருளாதாரத்தில் எந்த மாநிலமும் சாதிக்காத டபுள் டிஜிட் வளர்ச்சியை நாம் சாதித்துக் கொண்டிருக்கிறோம்.. இந்த சாதனைப் பயணம் விளையாட்டுத்துறையிலும் எதிரொலிக்கிறது..
திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்காக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கோப்பையை உருவாக்கினோம்.. இந்த ஆண்டு 32,000-க்கும் மேற்பட்டோர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.. ரூ. 1 லட்சம், ரூ.75,000, ரூ.50,000 என பரிசுத் தொகை வழங்கி வருகிறோம்.. முதல் முறையாக இ ஸ்போர்ட்ஸ் நடத்தப்பட்டுள்ளது.. கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை உள்கட்டமைப்புக்கு ரூ.170 கோடி நிதி ஒதுக்கப்பட்டது..
ஆனால் நாம் ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் 601 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறோம்.. ஒட்டுமொத்தமாக விளையாட்டுத் துறைக்கு ரூ. 1,945 கோடி.. அதனால் நமது திராவிட மாடல் அரசு விளையாட்டு துறையின் பொற்காலம் என்று சொன்னேன்.. விளையாட்டுத் துறைகளை பட்டியலிட்டு சொன்னால் இன்று முழுவதும் சொல்ல வேண்டியிருக்கும்.. அரசு மீது வீரர், வீராங்கனைகள் வைத்த நம்பிக்கை தான் எங்களுக்கு மிகப்பெரிய விருது..” என்று பெருமிதம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன விஷயத்தையும் முதல்வர் பகிர்ந்து கொண்டார்.. அப்போது “ நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது ஏராளமான பணிகளை, முன்னெடுப்புகளை செய்வதை பார்த்து, ஒரு விழாவில் பேசிய முதல்வர் கலைஞர் அவர்கள் நான் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு பேசி நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.. என்று சொன்னார்.. இன்று அதே ஏக்கம் எனக்கும் வந்துள்ளது.. நானே விளையாட்டுத்துறையையும் கவனித்துக் கொள்ளலாமே என்று எனக்கு தோன்றுகிறது.. காரணம், உதயநிதியின் பணிகள் அப்படி உள்ளது..
உதயநிதியின் பணிகள் மேலும் சிறக்க வேண்டும்.. வீரர், வீராங்கனைகள் மேலும் மேலும் வளர வேண்டும். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அத்தனை வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கி தருவோம். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முதலமைச்சராக நானும் இருக்கிறேன்.. துணை முதல்வரான உதயநிதி இருக்கிறார்.. உங்கள் சாதனை பயணம் தொடர எனது வாழ்த்துகள்.. களம் நமதே வெற்றி நமதே ..” என்று தெரிவித்தார்.
Read More : தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!