திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ளது திருவெள்ளறை பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் நான்காவது திருத்தலமாகப் போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணிபுரிந்த சுரேஷ் (54) என்பவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இக்கோயிலுக்குச் சொந்தமான நந்தவனத்தில், சுரேஷ் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இணையத்திலும், பக்தர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விசாரணையில், இந்த சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது. இதுகுறித்து விளக்கமளித்த சுரேஷ், தனக்குத் திருமணமாகவில்லை என்றும், சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்துவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர், புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகு, சுரேஷை உடனடியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பணிமாற்றம் செய்து, அவரைத் தனது நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
திருவெள்ளறை சம்பவ அதிர்ச்சி நீங்கும் முன்னரே, தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் மற்றொரு அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுவாமிமலை முருகன் கோயிலின் இணைக்கோயிலான இங்கு, 75 வயது அர்ச்சகர் விஸ்வநாதர் என்பவர் 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
காணிக்கை செலுத்தச் சென்ற சிறுமியிடம் அர்ச்சகர் தவறாக நடக்க முயன்றதைக் கண்டு சிறுமி கதறியுள்ளார். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, கும்பகோணம் மகளிர் காவல்துறையினர் 75 வயதான அர்ச்சகர் விஸ்வநாதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கோயில்களில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களின் தொடர்ச்சியான இத்தகைய ஒழுங்கீனங்கள், பக்தர்களிடையே மிகுந்த மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோயில்களின் புனிதத்தைக் காக்கவும், இதுபோன்ற வக்கிரச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



