நவீன உணவு பழக்கவழக்கங்களால், உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஜிம்முக்கு செல்லவோ, கடுமையான டயட்களைப் பின்பற்றவோ நேரமில்லாதவர்களுக்கு, உணவின் மூலமாகவே உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரும் வழிமுறைகள் தேவைப்படுகின்றன. உடலில் தேவையில்லாமல் படிந்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கான பாரம்பரியத் தீர்வுகளில் ஒன்றுதான் ‘கொள்ளுப் பொடி’. “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற நம் முன்னோர்களின் கூற்றுக்கு ஏற்ப, இந்தச் சத்தான பொடியை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், தொங்கும் தொப்பையைக் குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு: ஒரு கப்
உளுத்தம் பருப்பு: 1/4 கப்
கடலைப்பருப்பு: 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்: காரத்திற்கு ஏற்ப
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு
செய்முறை :
முதலில், ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்க்கவும். கொள்ளுப் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில், நல்ல வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். கொள்ளு சிவந்து, லேசான பழுப்பு நிறத்திற்கு மாறியதும், அதை ஒரு தட்டில் பரத்தி, நன்றாக ஆற விடவும்.
அடுத்து, அதே பாத்திரத்தில் சிறிதளவு கூட எண்ணெய் சேர்க்காமல், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காம்பு நீக்கப்பட்ட காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இறுதியாக, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தையும் லேசாகச் சூடு செய்து கொள்ள வேண்டும்.
வறுத்த அனைத்துப் பொருட்களும் முழுமையாக ஆறிய பிறகு, அவற்றைப் பொடி செய்வதற்கு ஏற்ற ஒரு மிக்ஸியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இந்தப் பொடியை மிகவும் நைசாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைத்து எடுப்பது சுவையைக் கூட்டும். அரைத்த கொள்ளுப் பொடியைக் காற்றுப் புகாத கண்ணாடி டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்..?
உடல் எடையை குறைக்கும் இலக்குடன் இருப்பவர்கள், இந்தப் பொடியை வாரத்தில் குறைந்தது 4 முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் பலனளிக்கும். சூடான இட்லி, தோசை அல்லது சாதத்துடன், சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இந்தப் பொடியைச் சாப்பிட்டு வரலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பு படிப்படியாக கரைந்து, உடல் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாறும் என்று நம்பப்படுகிறது.
Read More : “தினமும் ஒரு கப் காஃபி குடித்தால் இதய நோய் வராது”..!! புதிய ஆய்வில் வெளிவந்த ஆச்சரியமான முடிவுகள்..!!



