ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் தான் கடந்த சில நாட்களாக மீண்டும் பேசுபொருளாகவும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.. யார் இந்த எப்ஸ்டீன்? அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்ன? இப்போது ஏன் அவர் பேசு பொருளாக மாறி உள்ளார்.. விரிவாக பார்க்கலாம்..
ஜெஃப்ரி (ஜெஃப்) எப்ஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர நிதி ஆலோசகர். அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் கடத்தல், பாலியல் சுரண்டல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2000-களின் தொடக்கத்தில் இருந்தே இவர் மீது புகார்கள் வந்தாலும், நீண்ட காலம் சட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது.
உலகின் பணக்காரர்களுக்கு சிறுமிகளை வழங்குவதை தனது தொழிலாகக் கொண்டிருந்தார். சுருக்கமாக சொன்னால் அவர் ஒரு புரோக்கர்.. அவருக்கு ‘லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்’ என்ற பெயரில் சொந்தமாக ஒரு தீவு இருந்தது. அது எப்ஸ்டீன் தீவு மற்றும் பாலியல் துஷ்பிரோக தீவு என்றும் அழைக்கப்பட்டது.
எப்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள்:
எப்ஸ்டீனிடம் போயிங் 727 என்ற சொந்த விமானம் இருந்தது. அது ‘லோலிடா எக்ஸ்பிரஸ்’ என்றும் அழைக்கப்பட்டது. லோலிடா என்றால் ஒரு ஆணின் பாலியல் ஆசைகளைத் திருப்திப்படுத்தும் இளம் பெண் என்று பொருள்.
எப்ஸ்டீனுக்கு உலகின் பெரும் புள்ளிகளுடன் குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் உலகின் பல பகுதிகளில் இருந்தும் அழகான பெண்களை, வற்புறுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ தனது தீவுக்குக் கொண்டு வருவார். இந்த பெண்களில் பெரும்பாலானோர் 14 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். பலர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
உலகின் பெரும் பணக்காரர்கள் தங்கள் காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள ‘லோலிடா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் அங்கு செல்வார்கள். இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடுவார்கள். தான் சிக்க வைத்த பெண்கள் மூலம் மேலும் பலரை தனது வலையத்திற்குள் கொண்டு வருவார். அவரிடம் மிகப்பெரிய அளவில் செல்வம் இருந்தது. அதுமட்டுமல்லாமல், உலகின் பெரும் பணக்காரர்கள் அனைவரும் அவரது வாடிக்கையாளர்கள். இது அவர் விளையாடும் ஒரு விளையாட்டாகவே மாறிவிட்டது.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் 2019-ல் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலேயே இறந்துவிட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது.. ஆனால் அது கொலை என்றே பலரும் கூறுகின்றனர்.
எப்ஸ்டீனின் பணக்கார வாடிக்கையாளர்களின் ரகசியங்கள் வெளிவந்துவிடும் என்பதால் அவர்களே அவரைக் கொன்றுவிட்டார்கள் என்ற கோட்பாடும் உள்ளது.. 4 நாட்களுக்கு முன்பு, அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் கோப்புகள் என்ற பெயரில் மூன்று மில்லியன் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 புகைப்படங்களை வெளியிட்டது.
அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் அதில் இடம்பெற்ற முக்கிய தலைவர்களின் பெயர்களும் தான் சர்ச்சைக்கு காரணம்.. டொனால் ட்ரம்ப் பில்கேட்ஸ், பில் கிளிண்டன், எலான் மஸ்க், இளவரசர் ஆண்ட்ரூ என பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.. மேலும் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.. அதாவது 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி எப்ஸ்டீனின் ஆலோசனையின் பெயரிலேயே இஸ்ரேல் சென்றார் எனவும் அது டிரம்புக்கு சாதகமாக அமைந்தது என்றும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது..
அதே போல் தீவில் ரஷ்யப் பெண்களுடன் பில்கேட்ஸ் உடலுறவு கொண்ட பிறகு, அவருக்கு பாலியல் நோய் வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.. அதனால்தான் அவர் மருந்து வாங்கினார் என்பதற்கான ஆவணங்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் உயர் அதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்கள், பணக்கார தொழிலதிபர்கள், உலகப் பிரபலங்கள் ஆகியோரின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம். இதனால், “உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?” என்ற கேள்வி எழுந்தது.
இரண்டாவதாக, வெளியிடப்பட்ட ஆவணங்களில் பல தகவல்கள் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தன. முக்கியமான பெயர்கள், விவரங்கள் கருப்பு கோடுகளால் மறைக்கப்பட்டதால், முழு உண்மை வெளிவரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
மூன்றாவதாக, சில ஆவணங்கள் வெளியானபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளிப்படும் அபாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
தற்போது நிலை என்ன?
அமெரிக்க நீதித்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆனால், அனைத்து ஆவணங்களும் முழுமையாக வெளியிடப்படவில்லை.. பல முக்கிய தகவல்கள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளன.. எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
பாதிக்கப்பட்டோர் மற்றும் சமூக அமைப்புகள், முழு உண்மையும் வெளிவர வேண்டும், அதிகாரம் கொண்டவர்களாக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு தனி மனிதன் அல்ல; அதிகாரம், பணம், அரசியல் செல்வாக்கு ஆகியவை ஒன்றிணைந்தால் சட்டம் எவ்வளவு தூரம் பின்னடையும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு வழக்கின் முக்கிய குற்றவாளி.. ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்பது வெறும் ஆவணங்களின் தொகுப்பு அல்ல; உலகின் சக்திவாய்ந்தவர்களுக்கான நீதியின் உண்மையான சோதனை எனவே இது இன்றும் உலகம் முழுவதும் கவனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.



