நாள்பட்ட சிறுநீரக நோய் உலகளவில் பெரும் சுகாதார சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த நோயாளிகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, மருத்துவத் துறைக்கே சவாலாக உள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் உலகளாவிய நோய் சுமை பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் இந்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1990 முதல் 2023 வரையிலான 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நோய்கள், காயங்கள் மற்றும் நோய் காரணிகளின் போக்குகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்த ஆய்வின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 138 மில்லியன் (13.8 கோடி) பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, சீனாவுக்கு (152 மில்லியன்) அடுத்தபடியாக உலகளவில் அதிக CKD நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியாவை நிறுத்தியுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 15 லட்சம் பேர் சிறுநீரக நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது தனிப்பட்ட பாதிப்பாக மட்டுமில்லாமல், மற்ற முக்கிய நோய்களுக்கும் பங்களிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, 2023 ஆம் ஆண்டில் இதய நோயால் ஏற்பட்ட உலகளாவிய மரணங்களில் 12% நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாகவே நிகழ்ந்துள்ளது. இது, நீரிழிவு மற்றும் உடல் பருமனை தொடர்ந்து, இதயம் தொடர்பான இறப்புக்கான 7-வது முக்கிய காரணமாகவும் விளங்குகிறது.
இந்த நோய்க்கு காரணமான 14 முக்கிய அபாயக் காரணிகள் ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக உப்பு கொண்ட உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைவாக உள்ள உணவுமுறை ஆகியவை அடங்கும்.
விழிப்புணர்வு அவசியம் :
IHME-இன் மூத்த பேராசிரியர் தியோ வோஸ் இது குறித்துப் பேசியபோது, “நாள்பட்ட சிறுநீரக நோய் பிற நோய் பாதிப்புக்கான முக்கிய காரணமாக இருந்தபோதிலும், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் போதுமானதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், நோயின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தவும், இதய நோய் உள்ளிட்ட பிற சிக்கல்களைத் தடுக்கவும் தகுந்த பரிசோதனைத் திட்டங்கள் மற்றும் ஆரம்பகால நோய் கண்டறிதல் உத்திகள் மிகவும் அவசியமாகிறது என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கான அணுகல் உலகளவில் குறைவாக உள்ள நிலையில், நோயறிதல் மற்றும் மலிவு விலை சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமே, சுகாதார அமைப்புகள் மீதான சுமையை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.



