இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்ட மக்களும் புத்தாடை அணிந்து, விதவிதமான பலகாரங்களுடன், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் சென்னையில், நேற்று இரவு வானம் முழுவதும் வெளிச்சம் நிறைந்திருக்க, பட்டாசுச் சத்தம் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் குவிந்த பட்டாசு கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சுமார் 60 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் மாநகரெங்கும் அகற்றப்பட்டுள்ளன. மண்டல அளவில் பார்க்கும்போது, ஆலந்தூர் மண்டலத்தில் அதிகபட்சமாக 6.89 மெட்ரிக் டன் கழிவுகளும், பெருங்குடி மண்டலத்தில் 6.03 மெட்ரிக் டன் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.
இந்தக் கழிவுகளை அகற்றும் பணியில் 6,000-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் தரம்பிரிக்கப்பட்டு, கும்மிடிபூண்டி, பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய கிடங்குகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், பொதுமக்கள் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று, தீபாவளி கொண்டாட்டத்தின் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வழக்கத்தை விட அழைப்புகளின் எண்ணிக்கை 61% கூடுதலாக வந்துள்ளதாக அதன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி நாளான நேற்று மாலை 6 மணி வரை மட்டும் மொத்தம் 4,635 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீக்காயங்களுக்காக மட்டும் 135 அழைப்புகள் பதிவாகியுள்ளன என்றும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
Read More : தினமும் முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா..? பிரச்சனையே இதுதான்..!! பலருக்கும் இது தெரியாது..!!



