கார்த்திகை பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். இந்தப் புனித நாளில் சிவபெருமான், பெருமாள், முருகன், அம்பிகை, குலதெய்வம் மற்றும் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபடப் பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் கார்த்திகை பௌர்ணமியில் நாம் செய்யும் வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மங்கள காரியங்கள் அனைத்தும் பல மடங்கு பலனை திருப்பிக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்தவை.
கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படும் இந்த நாள், சிவபெருமானை ஒளி வடிவமாக ஒவ்வொரு வீட்டிலும் எழுந்தருளச் செய்யும் ஒரு நிகழ்வாகும். இந்த நாளில் வெறும் விளக்கேற்றுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட மூன்று மங்களப் பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம், வருடம் முழுவதும் மகாலட்சுமியின் அருட்கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும். இதனால் கடன், வறுமை நீங்கி, செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
புதிய அகல் விளக்குகள் : கார்த்திகை தீபத்தன்று புதிதாக மண்ணால் செய்த அகல் விளக்குகளை வாங்கி வீட்டில் விளக்கேற்றுவது மங்களத்தின் அடையாளமாகும். புதிய அகல் விளக்குகள் வாங்குவது புதிய வரவையும், புதிய அதிர்ஷ்டத்தையும் வீட்டிற்குக் கொண்டு வரும். அதிக விளக்குகள் வாங்க முடியாதவர்கள் கூட, அன்றைய தினம் இரண்டு புதிய அகல் விளக்குகளையாவது வாங்கி, அதில் பசும் நெய் ஊற்றித் தீபம் ஏற்றுவது மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான செயலாகும்.
மாவிளக்குக்கான பொருட்கள் : கார்த்திகை தீபத் திருநாள் அன்று படைக்கப்படும் முக்கியமான பிரசாதங்களில் ஒன்று மாவிளக்கு. இதைச் செய்வதற்கான பச்சரிசி மாவு மற்றும் வெல்லம் போன்ற பொருட்களைப் புதிதாக வாங்கி மாவிளக்கு செய்து படைக்க வேண்டும். மாவிளக்கு என்பது தானிய லட்சுமியின் அம்சம் என்பதால், இதைச் செய்து படைக்கும் வீட்டில் எப்போதும் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடே ஏற்படாது என்பது நம்பிக்கை.
மஞ்சள் மற்றும் குங்குமம் : கார்த்திகை தீபத்தன்று குங்குமம் மற்றும் மஞ்சளைப் புதிதாக வாங்கி, பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இவை இரண்டும் ஆதிசக்தியின் அம்சமாகக் கருதப்படும் மிக முக்கியமான மங்களப் பொருட்கள் என்பதால், இவற்றை வீட்டில் வைப்பது தெய்வீக சக்தியை ஈர்ப்பதுடன், அன்னை பராசக்தியின் அருளையும் பெற வழிவகுக்கும்.
முடிந்தவர்கள் இந்த 3 பொருட்களையும் வாங்கி வழிபடலாம். முடியாதவர்கள், இதில் ஏதேனும் ஒரு பொருளை மட்டுமாவது வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவதால் மகாலட்சுமியின் அருள் நிச்சயம் நிலைத்திருக்கும்.
Read More : இன்று கார்த்திகை தீபம்..!! எக்காரணத்தை கொண்டும் இந்த 3 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..!!



