விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நர்சிங் பட்டதாரி பெண்ணை தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கௌரவத்திற்காக கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் பிரியங்கா (24), நர்சிங் படிப்பை முடித்துவிட்டுத் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு மதுரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், தான் வேறொருவரைக் காதலிப்பதாகவும் பிரியங்கா கூறியுள்ளார்.
மகளின் காதலுக்குத் தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் பாலமுருகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பால் பயந்துபோன பிரியங்கா, கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தார்.
வீட்டிற்குச் செல்லப் பிரியங்கா மறுத்ததால், காவல்துறையினர் அவரை விருதுநகரில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், காப்பகத்திற்குச் சென்ற ரமேஷும், பாலமுருகனும் தங்களது கோபத்தை மறைத்துக்கொண்டு, பிரியங்காவிடம் நயமாகப் பேசி சமாதானம் செய்துள்ளனர். இதனை நம்பிய பிரியங்கா அவர்களுடன் காரில் புறப்பட்டுள்ளார். அவர்கள் நேராக ரமேஷின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு சென்றவுடன் தந்தை மற்றும் அண்ணனின் முகம் மாறியுள்ளது.
பிரியங்காவை ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டிய அவர்கள், “நாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யாமல் குடும்ப மானத்தை வாங்குகிறாயே, நீ உயிரோடு இருக்கக் கூடாது” என்று ஆக்ரோஷமாக கத்தியுள்ளனர். ஆத்திரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியங்காவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் அலறிய பிரியங்காவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் பாலமுருகனை அதிரடியாகக் கைது செய்தனர். சொந்த மகளையே தந்தை கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பெண்களே..!! தொழில் தொடங்க விருப்பமா..? தமிழ்நாடு அரசு கொடுத்த செம வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!



