தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், கடந்த 2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கீடு செய்ய வேண்டும். உயர்மட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 40 சதவீதம் வரை மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அரசு பணிகளில் வாய்ப்பு தரப்படுகிறது.
இனி இவர்கள் பதவி உயர்வையும் பெற இருக்கின்றனர். அதன்படி, இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை திறன் உடையவர்களுக்கு பதவி உயர்வில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உணரும் திறன் பெற்றவர்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர் – சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகர்த்துவோர், ஆட்டிசம் -அறிவுத்திறன் குறைபாடு-கற்றலில் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாக கருதி பதவி உயர்வுக்கு அவர்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து எந்தெந்த பதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி ஊழியர் ஏற்கனவே பதவி உயர்வுக்கான தகுதிகளை பெற்று அதற்கான பட்டியலில் இடம்பெற்றிருப்பின், குறிப்பிட்ட அந்த வேலை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்படவில்லை என்றால் கூட அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதை கண்காணிக்க மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலர்கள் நோடல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நோடல் அதிகாரிகள் இது தொடர்பான அறிக்கையை ஒருங்கிணைப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது,
Read more: தி புரூஸ்லி ஸ்டோரி பட நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!!