கர்நாடக மாநிலம் மாண்டியா மணிக்கண்ணஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை தீபிகா வெங்கடேஷ் கவுடா (28), மர்மமான முறையில் காணாமல் போனார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் மலையடிவாரத்தில் உள்ள புதரில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கணவர் லோகேஷ் மற்றும் கிராம மக்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டு, சந்தேகம் அடைந்து உடலை கண்டுபிடித்தனர்.
தீபிகா ஒரு ஆசிரியை மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரும் ஆவார். அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் பல இளைஞர்களை கவர்ந்தன. இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயது நிதிஷ் என்ற கல்லூரி மாணவர், தீபிகாவை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்ந்து, பின்னர் நிஜ வாழ்க்கையிலும் பழகத் தொடங்கினார். தீபிகா அவரை சகோதரனாக கருதினாலும், நிதிஷின் நோக்கம் வேறாக இருந்துள்ளது. அவர்களின் நட்பு குறித்து அக்கம்பக்கத்தினர் தவறாகப் பேசியதால், லோகேஷ் தீபிகாவை நிதிஷுடன் பேசுவதை நிறுத்தச் சொன்னார்.
காவல்துறை விசாரணையில், நிதிஷ் தீபிகாவை தனது பிறந்தநாளுக்காக மெலுகோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு வற்புறுத்தியது தெரியவந்தது. பின்னர், தீபிகா அங்கு சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த நிதிஷ், தீபிகாவின் கழுத்தை நெரித்து, தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை அதே இடத்தில் புதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த மர்மமான மரணத்தைப் பற்றி லோகேஷ் கொடுத்த தகவல்கள், போலீசாருக்கு வழிகாட்டியது. அவர்கள் நிதிஷின் மொபைல் போன் சிக்னலை வைத்து, ஹொசபேட்டை, விஜயநகரில் வைத்து அவரைக் கைது செய்தனர். விசாரணையில், நிதிஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்தக் கொலையை கண்ட ஒரு சுற்றுலாப்பயணி எடுத்த 13 வினாடி வீடியோ, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அமைந்தது.
நிதிஷின் தந்தை கிராமத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்ததால், ஆரம்பத்தில் போலீசார் இந்த வழக்கில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த செய்தி மற்றும் வீடியோவின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளியை கைது செய்துள்ளது. நிதிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை நடந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Read More : அப்படிப்போடு..!! கார், ஏசி, டிவி விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!