கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கு அருகில், 24 மணி நேரமும் வற்றாமல் பொங்கி வழியும் ஒரு அதிசயமாக கருதப்படும் தீர்த்தம் குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் தீர்த்தம், மனிதர்களின் கர்ம வினைகள் மற்றும் பித்ரு தோஷங்களைப் போக்கும் சக்தி கொண்டது என பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்த அதிசய தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன், லிங்க வடிவில் அருள்பாலிப்பதுடன், ருத்ர அவதாரமாகவும் காட்சி தருகிறார். தமிழ்நாட்டில் இரண்டே இடங்களில் மட்டுமே மார்க்கண்டேஸ்வரரை இந்த வடிவத்தில் தரிசிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
அவற்றில் இந்தக் கோவிலும் ஒன்று என்பது இதன் கூடுதல் சிறப்பு. மார்க்கண்டேயரின் வரலாற்றில், என்றென்றும் 16 வயதோடு இருக்க வரம் கிடைத்த திருக்கடையூர் நிகழ்வுக்குப் பிறகு, இந்த கிருஷ்ணகிரி கோவிலில்தான் சிவன் அவருக்கு மோட்சம் அளித்ததாகக் கோவில் வரலாறு கூறுகிறது. மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயது கொடுத்த வரலாற்றுடன் இந்தக் கோவில் பின்னிப் பிணைந்துள்ளது.
இந்தக் கோவில் பழங்காலத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதற்கான சான்றாக, கோவில் கல்வெட்டுகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயர் தொடர்புடைய இந்தத் தென்பெண்ணை ஆற்றின் நீர், மாமி என்ற இடத்தில் உள்ள சுயம்பு லிங்கத்தைத் தழுவி, அங்கிருந்து நந்தி தீர்த்தமாக வெளிவருகிறது. இத்தீர்த்தம் ‘மாட்டு வாய் தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
தினமும் எண்ணற்ற பக்தர்கள் இந்த நந்தி தீர்த்தத்தில் நீராடி, அதன் பின்னரே மார்க்கண்டேஸ்வரரை தரிசிக்க வருகின்றனர். இந்த நந்தி தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம், பாவ விமோசனம், முன்னோர்களின் சாப தோஷம், கர்ம வினைகள் மற்றும் பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் திடமாக நம்புகிறார்கள். இந்த வற்றாத தீர்த்தம், கிருஷ்ணகிரியின் ஆன்மீகப் பெருமையை உயர்த்தும் ஒரு சான்றாகத் திகழ்கிறது.
Read More : திருமண வரம் முதல் குழந்தை பாக்கியம் வரை.. வேண்டியதை நிறைவேற்றும் அதிசய தலம்..! எங்க இருக்கு தெரியுமா..?



