ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவானியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், அங்குள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). இருவரும் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு 16 வயது மகளும், 11 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம், நாகராஜ் வேலைக்கு சென்ற நிலையில், விஜயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில், ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, விஜயாவின் தலையில் கிரைண்டர் குழவிக்கல் கொண்டு தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி துண்டு துண்டாக சிதறி கிடந்தது. அருகில், மிளகாய்ப்பொடி பொட்டலம், அரிவாள்மனை ஆகியவையும் இருந்துள்ளது. இதையடுத்து, தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, விஜயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
வீட்டிற்கு அருகே பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்த போது, நாகராஜுடன் பட்டறையில் வேலை பார்த்த மோகன் என்பவர், சம்பவ நேரத்தில் விஜயாவின் வீட்டுருகே வந்து சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, போலீசார் மோகனை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், விஜயாவுக்கும் மோகனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில், மோகன் விஜயாவைத் தலையில் தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், சட்டையில் படிந்த ரத்தத்தை கழுவி சுத்தம் செய்து, யாருக்கும் தெரியாமல் பட்டறைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.