ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் புஷ்பா (30), தனது காதலனும் சக யூடியூபருமான சந்தீப்பால் (32) கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டி வந்த புஷ்பா, தனது கணவரை விட்டுப் பிரிந்து ஹர்ஷனா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்புடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார்.
இருவரும் இணைந்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில், புஷ்பா சந்தீப்பை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதற்கு சந்தீப் தொடர்ந்து மறுத்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது, ஆத்திரத்தில் புஷ்பாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், புஷ்பாவின் உடல் சந்தீப்பின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சந்தீப்பே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அழுததாகவும் கூறப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் காவல்துறையினர் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் புஷ்பாவின் கழுத்து நரம்புகள் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சந்தீப்பின் நடத்தை மற்றும் அவர் அதிகமாக அழுதது குறித்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
“புஷ்பா திருமணத்திற்காக அழுத்தம் கொடுத்தார். மறுத்தபோது வாக்குவாதம் தீவிரமடைந்ததால் நான் ஆத்திரத்தில் கொன்றுவிட்டேன்” என்று சந்தீப் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது சந்தீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



