கர்நாடக மாநிலம் பெங்களூரு எல்லையில் வசித்து வந்த யசோதா என்ற திருமணமான பெண், தனது கள்ளக்காதலன் மற்றொரு தோழியுடன் உறவு வைத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யசோதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த உறவு தொடர்ந்த நிலையில், யசோதா தனது தோழியான பிரியங்காவை விஸ்வநாத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், யசோதாவுக்கு தெரியாமல் பிரியங்காவும் விஸ்வநாத்தும் செல்போனில் பேசி நெருங்கிப் பழகத் தொடங்கினர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, விஸ்வநாத் யசோதாவிடம் பேசுவதை குறைத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த யசோதா, தோழி பிரியங்கா மற்றும் விஸ்வநாத்தின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினார். இருவரது நெருக்கத்தை கண்டு ஆத்திரமடைந்த அவர், பிரியங்காவின் நட்பை துண்டிக்க வேண்டும் என்று விஸ்வநாத்திடம் சண்டையிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், விஸ்வநாத்தும் பிரியங்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருப்பதை யசோதா அறிந்துகொண்டார். உடனடியாக அந்த ஹோட்டலுக்கு சென்ற யசோதா, இருவரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற யசோதா, இருவரையும் விடுதி அறையில் வைத்துத் தாக்கியுள்ளார்.
பிறகு, அருகில் இருந்த மற்றொரு அறைக்குச் சென்ற யசோதா, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், யசோதாவின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விஸ்வநாத் மற்றும் பிரியங்காவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.