தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரத்தில், அண்மையில் திருமண நிச்சயம் முடிந்திருந்த ஒரு இளம் ஜோடி உயிரிழந்த சம்பவம், மிகுந்த உருக்கத்தை அளித்துள்ளது.
கரூரைச் சேர்ந்த 24 வயதான ஆகாஷ் என்பவருக்கும், 24 வயதான கோகுலஸ்ரீ என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு மேல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, ஆகாஷ் மற்றும் கோகுலஸ்ரீ ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்குத் தயாராக இருந்த அந்த இளம் ஜோடி, மணமேடை காணாமலேயே ஒரே நேரத்தில் மண்ணில் மறைந்த இந்த துயரச் சம்பவம், இரு குடும்பத்தினரையும் உறவினர்களையும் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.