தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் அவர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதிருப்தியில் இருக்கும் அவர் விஜய்யின் பக்கம் சாயக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த யூகங்களுக்கு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்திய அவர், “என்னை அடையாளப்படுத்தியதும், நான் இன்று இருக்கும் நிலைக்குக் கொண்டு வந்ததும் திமுக தான். வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால் களம் காண்பேன். இல்லையெனில் கட்சியின் வெற்றிக்காகப் பணியாற்றுவேன். எனது உயிர் மூச்சு உள்ளவரை நான் ஒரு திமுக தொண்டனாகவே நீடிப்பேன்” என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக மற்றும் திமுகவில் இருக்கும் அதிருப்தி முகங்களைக் குறிவைத்து தனது கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், பழனிமாணிக்கத்தின் இந்த மறுப்பு திமுக தலைமைக்கு ஒரு நிம்மதியை தந்துள்ளது.
Read More : உஷார்..! டீ உடன் இந்த உணவுகளை தெரியாமல் கூட சாப்பிடாதீங்க.. மிகவும் ஆபத்தானது..!



