கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் கணவர் வகுப்பறைக்குள் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி, முன்னாள் மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்துப் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு ஆணும் பெண்ணும் பள்ளி வகுப்பறைக்குள் சென்று கதவைப் பூட்டியதை கண்ட மாணவர்கள் சந்தேகமடைந்து அவர்களைத் தட்டிக் கேட்டனர்.
வெளியே வந்த அந்த நபர், “நான் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்” என்று கூறி, மாணவர்களை திமிராக துரத்தியுள்ளார். ஆனால், மாணவர்கள் விடாமல், “இது பள்ளியா? லாட்ஜா? நீங்கள் செய்வது சரியா?” என்று கேள்வி எழுப்ப, “எல்லா சாவியும் என்னிடம் தான் இருக்கிறது, முடிஞ்சதைப் பார்த்துக்கோங்க” என்று சவால் விட்டுச் சென்றுள்ளார்.
இந்த முழுச் சம்பவத்தையும் மாணவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உடனடியாகப் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் உமாவிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், வீடியோவில் சிக்கியவர் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் உமாவின் கணவர் உமேஷ் என்பது தெரியவந்தது. உமேஷ் மற்றும் அந்தப் பெண், வகுப்பறையைச் சுத்தம் செய்யவே அங்கு சென்றதாகவும், அதை மாணவர்கள் தவறாகப் படம்பிடித்து விட்டதாகவும் கூறி சமாளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் உமாவை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.



