தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இந்த 2 ஊர்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே பலர் மயக்கமடைந்தனர்.
விஜய் பேசிவிட்டு கிளம்பிய பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.. எனினும் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.. பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவனையில் உள்ளார். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கரூர் விரைந்துள்ளார்.. இந்த சம்பவம் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.. மேலும் முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்ல உள்ளார்..
இதுகுறித்து கவலை தெரிவித்த ஸ்டாலின் “ கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.