அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வியாழக்கிழமை புதிய சரிவை எட்டியுள்ளது. இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அதிகப்படியான வரிகள் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டில் மட்டும் இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் இருந்து 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் திரும்பப் பெற்றுள்ளனர். இதன் தாக்கத்தால், ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக ₹88.44 என சரிந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட ₹88.36 என்ற பழைய குறைந்தபட்சத்தை விட அதிகமாகும்.
அமெரிக்காவின் அதிக வரிகள் இந்தியாவின் வளர்ச்சிக்கும் வர்த்தகத்திற்கும் சவாலாக உள்ளது. இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு ஏற்றுமதியாளர்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர்டர்கள் குறைவதற்கான அபாயம் உள்ளது. இறக்குமதி நிறுவனங்கள் அதிக ஹெட்ஜிங் செய்ய வேண்டிய நிலை உருவாகி, நாணய சந்தையின் சமநிலையை சீர்குலைக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் நுகர்வை உயர்த்துவதற்காக ஜிஎஸ்டி வரிகளில் திருத்தம் அறிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக தடைகளை சரிசெய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி டாலர்கள் விற்று சந்தையை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது.
IFA குளோபல் நிறுவனத்தின் CEO அபிஷேக் கோயங்கா கூறுகையில்: அமெரிக்க வரிகள் காரணமாக ரூபாய் குறுகிய காலத்தில் மேலும் பலவீனமடையலாம். வணிகர்கள் அதிக ஹெட்ஜிங் செய்யாமல், வணிக வாய்ப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
எந்த துறைகள் பாதிக்கப்படும்? ரூபாயின் மதிப்பு சரிவால், குறிப்பாக இறக்குமதியாளர்கள் (டாலர் மூலம் பொருட்களை வாங்கும் நிறுவனங்கள்) அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். அதே நேரத்தில், ஏற்றுமதியாளர்கள் ஆர்டர்கள் குறையும் அபாயத்தில் உள்ளனர்.
சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்? இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிதப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தியா இன்னும் 88 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவதால், டாலர் மதிப்பு உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கலாம். அதாவது ஏற்றுமதியால் கிடைக்கும் வருவாயை விட இறக்குமதி செலவு அதிகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், வட்டி விகிதங்கள் அதிகரித்தால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும்.