விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை இருப்பவருக்கே ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
கடந்த 8-வது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக திகழ்ந்தார். இதையடுத்து, தற்போது பிக்பாஸ் 9-வது சீசனில் பங்கேற்கப்போகும் புதிய முகங்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, நிகழ்ச்சிக்கான ஆடிஷன்கள் முடிவடைந்து, பங்கேற்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் 9 வீட்டில் இந்த முறை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் களமிறங்குவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் என்று அழைக்கப்படும் திவாகர், பிக்பாஸ் வீட்டில் இடம் பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், கூமாப்பட்டி தங்கபாண்டி, பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா ஆசாத், மற்றும் குக் வித் கோமாளி 6-ல் பங்கேற்ற உமைர் லத்தீஃப், ஷபானா ஷாஜஹான் ஆகியோரும் ஆடிஷனில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில், போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.