தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா காய்ச்சலின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நோயை கண்டறிய ‘IgM Elisa’ பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளில் கொசுவலை வசதிகளுடன் கூடிய பிரத்யேக வார்டுகளை உடனடியாக அமைக்கவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயைக் கட்டுப்படுத்த, குடியிருப்புகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிப்பது மிக அவசியமாகும். வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் நன்னீர் சேமிப்புப் பாத்திரங்களை வாரம் ஒருமுறை சுத்தம் செய்வதுடன், கொசுக்கடியில் இருந்து தப்பிக்க முழுக்கை ஆடைகள் மற்றும் கொசுவலைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வாரந்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசுப்புழு நாசினிகளைத் தெளிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் திட்டவட்டமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இத்தகைய காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.



