இந்திய ரயில்வே காலத்திற்கேற்ப தன்னை நவீனப்படுத்தி வருகிறது. வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள், சொகுசு இருக்கைகள் என பல மாற்றங்கள் வந்தாலும், ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் மட்டும் பல தசாப்தங்களாக மாறாமல் ‘வெள்ளை’ நிறத்திலேயே இருந்து வருகின்றன. பல வண்ணங்கள் இருக்கையில், ரயில்வே நிர்வாகம் ஏன் வெள்ளையை மட்டும் பிடிவாதமாகத் தேர்வு செய்கிறது என்பதற்குப் பின்னால் வலுவான அறிவியல் மற்றும் சுகாதாரக் காரணங்கள் உள்ளன.
ரயில்வே பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாறி மாறிப் பயன்படுத்துவதால், இந்த விரிப்புகளை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலாகும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும், இந்த விரிப்புகள் 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவியைப் பயன்படுத்தி (Steam Cleaning) சுமார் 30 நிமிடங்கள் வரை தீவிரமாகச் சுத்திகரிக்கப்படுகின்றன. இவ்வளவு அதிக வெப்பநிலையில் துவைக்கும்போது மட்டுமே கறைகளும், கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களும் முற்றிலும் அழியும். இந்த அதீத வெப்பத்தைத் தாங்கும் வலிமை வெள்ளை நிறத் துணிகளுக்கு மட்டுமே உண்டு.
சுத்தத்திற்காக பயன்படுத்தப்படும் அடர் ‘ப்ளீச்சிங்’ திரவங்கள் வண்ணத் துணிகளின் நிறத்தை மங்கச் செய்துவிடும். ஆனால், வெள்ளை துணிகள் எத்தனை முறை ப்ளீச் செய்தாலும் அதன் பொலிவை இழக்காமல், பார்ப்பதற்கு எப்போதும் புதியது போன்ற தோற்றத்தைத் தரும். மற்ற நிறங்களில் உள்ள துணிகள் அடிக்கடி துவைக்கும்போது மங்கி, பழையது போலத் தோற்றமளிக்கும். ஆனால், வெள்ளை நிறம் பயணிகளுக்கு ஒருவிதமான மனநிறைவையும், தூய்மையான உணர்வையும் வழங்குகிறது.
வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்வதற்கு மற்றொரு முக்கியமான நடைமுறைக் காரணமும் உள்ளது. துணிகளில் கறை அல்லது அழுக்குகள் இருந்தால், வெள்ளை நிறத்தில் அவை பளிச்செனத் தெரியும். இதனால் துவைக்கும் பணியாளர்களுக்கு எங்கே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது எளிதாகப் புரியும். அதேபோல், பயணிகள் பயன்படுத்தும்போதும் அந்த விரிப்பு சுத்தமாக இருக்கிறதா என்பதை ஒரே பார்வையில் உறுதி செய்துகொள்ள முடியும்.
Read More : பெண்களே..!! ரூ.5,000 உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா..? உடனே இதை பண்ணுங்க..!! வெளியான அறிவிப்பு..!!



