உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கரேலி என்னும் பகுதியில் வசித்து வந்த 17 வயதான பியூஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. தனது தந்தையை இழந்த பியூஸ், தனது தாய் காமினியுடன் வாழ்ந்து வந்தார். வழக்கமான நேரத்தில் பள்ளிக்கு செல்லும் பியூஸ், அன்று காலை 8.30 மணிக்கு பள்ளியில் இல்லாததால், பள்ளி நிர்வாகத்தினர் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர் போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து, மாணவன் பியூஸை காவல்துறையினர் வலைவீசி தேடினர். இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு பிரயாக்ராஜ் – மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் தலை மற்றும் உடலின் பிற பகுதிகள் கண்டெடுக்கப்பட்டது. இது பியூஸின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் ஸ்கூட்டியில் வந்த ஒரு வயதான நபர் பியூஸின் தலையை ஓடையில் வீசும் காட்சி தெளிவாக பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் சரண் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அவர் பியூஸை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சரண் சிங்கின் தம்பியின் பேரன் தான் பியூஸ். சரண் சிங்கின் மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அடுத்த ஆண்டு அவரது மகனும் உயிரை மாய்த்துக் கொண்டார். தொடர்ச்சியான இந்த மரணங்கள் தன்னை மற்றும் குடும்பத்தை சாபமென்று நம்ப வைத்ததாகவும், அதைத் தீர்க்கும் வழியாக ஒரு மந்திரவாதி கொடுத்த தீய ஆலோசனையை செயல்படுத்தியதாகவும் சரண் சிங் கூறியுள்ளார்.
அந்த மந்திரவாதியின் கூற்றுப்படி, தம்பியின் மனைவி தான் உங்களுக்கு சாபம் கொடுத்திருப்பதாகவும், பியூஸை நரபலி கொடுத்தால் குடும்பம் மீண்டும் சாந்தி பெறும் என கூறியுள்ளார். இதை முற்றிலும் நம்பிய சரண் சிங், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பியூஸை கடத்தி, தன் வீட்டிற்குள் அழைத்து வந்து, செங்கலால் தலையில் அடித்து, பின்னர் ரம்பம் மூலம் அறுத்து , உடலை துண்டித்துப் பிளாஸ்டிக் மூடிய பைகளில் போட்டு காட்டுப்பகுதியிலுள்ள ஓடையில் வீசியுள்ளார்.
இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சரண் சிங்கை கைது செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்தனர். பின்னர், இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read More : திடீர் திருப்பம்..!! பேராசிரியை கொடுத்த புகார்..!! இறந்துபோன அஜித்குமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!