கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் சமீபத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் உடலை மீட்டுப் போலீஸார் நடத்திய விசாரணையில், அது கள்ளக்காதலுக்காக மனைவி நடத்திய கொடூர கொலை என்பது அம்பலமாகியுள்ளது.
யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் மற்றும் சரணம்மா தம்பதியினர், பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தனர். கட்டிட மேஸ்திரியின் மகன் வீரபத்ரா, பசவராஜ் தம்பதியினரை வேலைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சரணம்மாவுக்கும் 19 வயதான வீரபத்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பசவராஜ், ஒருமுறை அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை நேரில் பார்த்துள்ளார். இதனால், மனைவியைக் கண்டித்த அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய சரணம்மாவும் வீரபத்ராவும் சேர்ந்து திட்டம் தீட்டினர்.
திட்டத்தின்படி, மது அருந்திவிட்டு வீட்டில் படுத்திருந்த பசவராஜின் தலையில் இருவரும் சேர்ந்து கல்லைப் போட்டுத் தாக்கியதுடன், கழுத்தில் கயிற்றால் கட்டித் தூக்கில் தொங்கவிட்டும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, தங்கள் நண்பர் ஒருவரை வரவழைத்து, பசவராஜின் உடலைக் காரில் ஏற்றிச் சென்று பெங்களூரு புறநகர் பகுதியில் எரித்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான தகவல் போலீஸ் விசாரணையில் வெளியாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



