உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தின் சியோஹாரா பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல், கொலைத் திட்டம் வரை சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மொராதாபாத் நகரில் வாடகைக்கு எடுத்து ஒரு கடை நடத்தி வருவதால், மாதம் ஓரிரு முறை மட்டுமே அவர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக மனைவியின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி கணவருடன் சண்டையிட தொடங்கியதால், தனது மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக கணவருக்குச் சந்தேகம் எழுந்தது. ஆனால், அவரது சந்தேகம் உண்மையாகவே இருந்தது.
மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வீட்டில் இருந்த சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் திருடியுள்ளார். இதை கணவர் கேள்வி கேட்க, மனைவியோ அவரை மிரட்டத் தொடங்கினார். அவர் கணவரின் சில அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, பணம் கொடுக்காவிட்டால் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிப் பிளாக்மெயில் செய்துள்ளார்.
வேறு வழியின்றி கணவர், தனது மனைவியின் காதலனின் வங்கிக் கணக்கிற்கு ரூ.11,000 பணம் அனுப்பியுள்ளார். நிலைமை இப்படி மோசமாகிக் கொண்டே சென்றது. ஒருநாள், கணவர் மனைவியின் செல்போனைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு ஆடியோ பதிவு கிடைத்தது. அந்த ஆடியோவில், மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாகக் காவல்துறையிடம் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



