திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 32 வயது பெண்மணி ஒருவர், தனது கணவரின் மறைவுக்கு பிறகு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கித் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக ஒருவரைத் தேடும் நோக்கில், அவரது சகோதரி மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர், அந்தப் பெண்ணிடம் தான் இன்னும் திருமணமாகாதவர் என்றும், உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறி நெருக்கமாகப் பழகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையை பெற்ற அந்த நபர், தனது தொழில் தேவைக்காக என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரை பவுன் தங்க நகையை வாங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு தனது சுயரூபத்தைக் காட்டிய அந்த வாலிபர், கடந்த மாதம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து அவரை மிரட்டிப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பிறகு அந்தப் பெண்ணை தவிர்த்து வந்ததோடு, கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கு அந்த நபரின் பெற்றோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். இது குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் இருப்பதும், இதே பாணியில் ஏற்கனவே வேறொரு பெண்ணை ஏமாற்றிப் பணத்தைப் பறித்ததும் தெரியவந்தது.
தற்போது அந்த நபரைக் கைது செய்துள்ள போலீசார், இவரிடம் சிக்கிய மற்ற பெண்கள் யார்? இந்த மோசடிப் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இணையதளங்கள் வழியாக வரன் தேடும் போது, சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணியை முழுமையாக விசாரிக்காமல் பணத்தைக் கொடுக்க வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.



