சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள தெல்கடி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் அங்கு அதிர்ச்சியையும். அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த 21 வயது இளம்பெண் ரூபா சாஹு, தனது காதலன் ஆனந்த் வர்மாவால் (24) மிக கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்காக ரூபா கொடுத்த அழுத்தமே இந்த கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி மாலை, வழக்கம்போல இருவரும் பைக்கில் அப்பகுதியில் உள்ள ஓர் அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தபோது, மீண்டும் திருமண குறித்த பேச்சு எழவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஆனந்த், ரூபாவை தாக்கியுள்ளார். இதில், அவர் மயக்கமடைந்ததை தொடர்ந்து, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையைச் சிதைத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், ரூபாவின் உடலில் ஒரு பெரிய கல்லைக் கட்டி அணையின் ஆழமான பகுதியில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
மறுநாள் ஜனவரி 26-ம் தேதி அணையில் சடலம் மிதப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கைராகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அருகே இருந்த பையில் ரூபாவின் ஆதார் அட்டை கண்டெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரது அடையாளத்தை உறுதி செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ரூபாவின் செல்போன் உரையாடல்கள் மற்றும் கடைசித் தொடர்புகளை ஆய்வு செய்தபோது, காதலன் ஆனந்த் வர்மா மீது சந்தேகம் வலுத்தது.
ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துத் தப்பிக்க முயன்ற ஆனந்த், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கல்லால் அடித்துக் கொன்று, உடலை அணையில் வீசியதை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார். இதனையடுத்து, கொடூரக் காதலன் ஆனந்த் வர்மாவைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : FLASH | சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல் களம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்..!!



