உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் பெருமையை விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சனீஸ்வரன் கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் சிலை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆன்மீகப் பெருமை மட்டுமன்றி, பிரம்மாண்டமான கட்டிடக் கலையாலும் இந்தக் கோவில் பக்தர்களைத் தன்வசம் ஈர்க்கிறது.
கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மகா கும்பகோபுரமும், 54 அடி உயரம் கொண்ட மகா கணபதியின் முதுகுக்பகுதியும் பக்தர்களுக்கு முதன்மையான தரிசனத்தைக் கொடுக்கிறது. இங்குள்ள 27 அடி சனீஸ்வரர் சிலை நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறது. மேலே உள்ள இரு கரங்கள் வில்லையும் அம்பையும் ஏந்தியிருக்க, கீழ்க்கரங்கள் முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.
பொதுவாக, சனீஸ்வரரின் வாகனமாகக் காகம் கருதப்பட்டாலும், இந்தக் கோவிலில் சனி பகவான் கழுகு வாகனத்துடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். மேலும், 80 அடி உயர மகா கும்ப கோபுரத்தில், சனிப்பெயர்ச்சி தினத்தன்று 8 ஆயிரம் லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றப்பட்டு பிரம்மாண்டமான விளக்கு ஏற்றப்படுவது இக்கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.
சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வாஸ்து தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட, துன்பங்கள் அனைத்தும் நீங்கி நிவாரணம் பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், இத்தலத்து தெய்வங்களைத் தரிசிப்பதன் மூலம் திருமணத் தடைகள், வியாபாரத் தடைகள், குடும்பப் பிரச்சினைகள் போன்றவை தீருவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள கோசாலையில் ‘கோதானம்’ மற்றும் ‘கோபூஜை’ செய்து, கோமாதாவின் அருளைப் பெறவும் பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. சனிப்பெயர்ச்சியின் போது இந்த மகா சனீஸ்வரரை தரிசிப்பது மிகவும் விசேஷம் என பக்தர்கள் நம்புவதால், அந்நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.
Read More : ஒரே பார்வையில் பக்தர்களின் துன்பத்தை நீக்கும் தெய்வம்.. சென்னையில் இப்படி ஒரு கோவிலா..?