கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு அரிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகை உலகில் எங்கும் தெரியவில்லை. அந்தப் பெண் 38 வயதாக இருந்தபோது கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு O Rh+வகை ரத்தம் இருப்பது தெரியவந்தது… இது மிகவும் அரிதானது.
O பாசிட்டிவ் ரத்த அலகுகள் எதுவும் அவருக்கு பொருந்தவில்லை. எனவே மருத்துவமனை ரோட்டரி பெங்களூரு TTK இரத்த மையத்தில் உள்ள மேம்பட்ட நோயெதிர்ப்பு ரத்தவியல் குறிப்பு ஆய்வகத்திற்கு பரிந்துரைத்தது.
மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?
டாக்டர் மாத்தூர் இதுகுறித்து பேசிய போது “மேம்பட்ட செரோலாஜிக்கல் நுட்பங்களைப் பயன்படுத்தி, எங்கள் குழு அவரது ரத்தம் ‘பேன்ரியாக்டிவ்’ என்று கண்டறிந்தது. அதாவது, அது அனைத்து சோதனை மாதிரிகளுடனும் பொருந்தவில்லை. இது ஒரு அரிய ரத்த வகை வழக்கு என்று அங்கீகரித்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 20 உறுப்பினர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் எதுவும் பொருந்தவில்லை. எனவே இந்த விவகாரம் மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்கப்பட்டது. அவரது மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரின் முயற்சியால், ரத்தமாற்றம் தேவையில்லாமல் அவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்..
இதற்கிடையில், அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள IBGRL சர்வதேச இரத்த குழு குறிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
உலகின் முதல் CRIB ஆன்டிஜென் கொண்ட பெண்
கோலாரைச் சேர்ந்த ஒரு பெண் CRIB ஆன்டிஜென் கொண்ட உலகின் முதல் பெண்மணி ஆவார். இங்கு ‘CR’ என்பது ‘Cromer’ ஐ குறிக்கிறது மற்றும் ‘IB’ என்பது ‘இந்தியா’ ஐ குறிக்கிறது, இந்த வரலாற்று அறிவிப்பு ஜூன் 2025 இல் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற சர்வதேச இரத்த மாற்று சங்கத்தின் (ISBT) 35 வது பிராந்திய மாநாட்டில் வெளியிடப்பட்டது. CRIB ஆன்டிஜென் பெற்ற உலகில் முதல் நபர் என்ற பெருமையைப் இந்தப் பெண் பெற்றுள்ளார் என்று டாக்டர் மாத்தூர் தெரிவித்தார்.
அரிய ரத்த வகைகள்
கர்நாடக மாநில ரத்த மாற்று மற்றும் மும்பையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் IIH மையத்துடன் இணைந்து, சர்வதேச இரத்த மாற்று சங்கத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன், ரோட்டரி பெங்களூரு TTK ரத்த மையம் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களின் அரிய நன்கொடையாளர் பதிவேட்டைத் தொடங்கியுள்ளது.
“சமீபத்திய ஆண்டுகளில், பல அரிய ரத்த வகைகளைக் கொண்ட நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த இரத்த மாற்று ஆதரவை வழங்குவதில் நாங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இந்த வழக்குகள் சர்வதேச மன்றங்களில் வெளியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன (எ.கா. D-, Rh பூஜ்ஜியம், B நெகட்டிவ் போன்றவை),” என்று மருத்துவர் கூறினார்.