இந்தியாவில் ஒரு காலத்தில் திருமணம் என்பது குடும்ப பெரியவர்களால், சாதி மற்றும் ஜாதக பொருத்தங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் (2016-2025) இந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளதை ‘ஜீவன்சாதி’ (Jeevansathi) தளம் நடத்திய விரிவான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய இளைஞர்கள் திருமணத்தை ஒரு கடமையாகப் பார்க்காமல், தங்களுக்குப் பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாழ்வியல் முடிவாகவே கருதுகின்றனர். இதனால், திருமணத்திற்கான சராசரி வயது 27-லிருந்து 29-ஆக உயர்ந்துள்ளது. முப்பது வயதை நெருங்கும்போதுதான் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான துணையை தேடவே ஆரம்பிக்கின்றனர்.
இந்த ஆய்வில் வெளிவந்துள்ள மிக முக்கியமான அம்சம் ‘சாதி’ குறித்த பார்வையாகும். 2016-ஆம் ஆண்டில் 91 சதவீதத்தினர் தங்களது சொந்த சாதிக்குள் மட்டுமே வரன் தேடினர். ஆனால், 2025-ல் இந்த எண்ணிக்கை 54 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, சாதி பற்றை விட குணமும், பரஸ்பர புரிதலுமே முக்கியம் என இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். சுமார் 90 சதவீத இளைஞர்கள், கைநிறையச் சம்பளம் அல்லது கச்சிதமான வயதை விட, ஒரு நல்ல துணை கிடைப்பதே வாழ்க்கைக்கு முக்கியம் என்று உறுதியாக கூறுகின்றனர். பணம் மற்றும் அந்தஸ்து மட்டுமே திருமணத்தை தீர்மானிக்கும் என்ற பழைய எண்ணம் தற்போது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
திருமணத்திற்கு பிறகு எங்கே குடியேறுவது என்ற விருப்பத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு, புனே போன்ற பெருநகரங்கள் இளைஞர்களை காந்தம் போல ஈர்க்கின்றன. வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், ஒரு நவீன வாழ்க்கை முறை மற்றும் சமூக தொடர்புகள் கிடைக்கும் என்பதால், சிறு நகரங்களில் இருப்பவர்கள் பெருநகரங்களில் உள்ள துணையை தேர்ந்தெடுத்து அங்கு செல்வதையே ஒரு கௌரவமாகவும், வாய்ப்பாகவும் கருதுகின்றனர்.
அதேபோல், மறுமணம் குறித்த சமூக பார்வையும் பக்குவமடைந்துள்ளது. விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் ஒரு வாழ்க்கையை தொடங்குவதை இன்றைய சமுதாயம் ஏற்க தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் இது ஒரு தடையாக கருதப்பட்டது, ஆனால், இன்று ஆறில் ஒரு திருமண ஜோடி மறுமணம் செய்துகொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய மாற்றமாகும்.
பொருளாதார பங்களிப்பைப் பொறுத்தவரை, “ஆண்தான் சம்பாதித்து குடும்பத்தை காக்க வேண்டும்” என்ற பழைய காலம் முடிவுக்கு வந்துவிட்டது. 42 சதவீதத்தினர் கணவனும் மனைவியும் சரிசமமாக சம்பாதித்து குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 87 சதவீத ஆண்கள் தங்களை விட அதிக சம்பளம் வாங்கும் பெண்களை திருமணம் செய்ய தயார் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளனர். இவ்வளவு தேடல்களுக்குப் பிறகும், தனக்குப் பிடித்த நபரை கண்டறிந்த 6 மாதங்களுக்குள்ளேயே திருமணத்தை முடிக்க 78 சதவீதத்தினர் விரும்புகிறார்கள். அதாவது, நிதானமாக தேடினாலும், சரியான நபர் கிடைத்துவிட்டால் உடனடியாக திருமண பந்தத்தில் இணைய இன்றைய தலைமுறை தயாராக இருக்கிறது.
Read More : தாய் வழி சொத்தில் கணவர், பிள்ளைகளுக்கு உரிமை உள்ளதா..? உயில் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது..?



