கோவையைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது தாயை இழந்த பின் தந்தை மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்தார். தற்போது ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, பள்ளியில் கல்வி பயின்றுக் கொண்டிருந்த அந்த மாணவி, தனது அக்காவுடன் அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், அத்தையின் வீட்டில் பிசியோதெரபி செய்வதாக வந்திருந்த சாகின் என்ற இளைஞர், முதலில் மாணவியின் அக்காவை மசாஜ் செய்ய அறைக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், அவர் வேகமாக வெளியேறி, கடைக்கு செல்வதாக கூறி அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், மாணவியிடம் பிசியோதெரபி என்ற பெயரில் நெருக்கமாக இருந்த சாகின், அவருடன் உடலுறவு வைத்துள்ளார். அதை தொடர்ந்து, பலமுறை அந்த மாணவியை மிரட்டி சாகின் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, மாணவி சாலையில் நடந்து செல்லும்போது, தவறான முறையில் அவர் தொல்லை செய்துள்ளார்.
சாகினின் பாலியல் தொல்லைகள் நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியபோது, மாணவி தன்னுடைய தந்தை மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்தார். பின்னர், அவர்கள் உடனடியாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சாகின் மற்றும் மாணவியின் அத்தை மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது சம்பந்தமான புகார் அளிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த பின்னும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது மாணவி தரப்பினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.