தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்த பிரேம் சரண் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. கணவர் பிரேம் சரண் அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார்.
சமீபகாலமாக முத்துலட்சுமியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டதால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் முத்துலட்சுமி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆலங்குளம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முத்துலட்சுமிக்கும், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த டிராக்டர் ஒர்க்ஷாப்பில் வேலை செய்யும் சக்திவேல் (32) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது.
உறவினர்கள் கண்டித்ததால் முத்துலட்சுமி சக்திவேலுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி முத்துலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, முத்துலட்சுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சக்திவேலைப் பிடித்து விசாரணை நடத்தி, அவரிடம் இருந்த வீடியோக்களை அழித்துள்ளனர். இருப்பினும், சக்திவேல் தன்னுடைய மனைவியின் செல்போனில் மறைத்து வைத்திருந்த முத்துலட்சுமியின் படங்களை, தனது ஒர்க்ஷாப்புக்கு அடிக்கடி வரும் முத்துராஜ் (36) என்பவருக்குப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
முத்துராஜும், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (42) என்பவரும் சேர்ந்து கொண்டு, அந்த வீடியோக்களைக் காட்டி முத்துலட்சுமியைத் தங்கள் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளனர். மேலும், அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவியதால், மனமுடைந்த முத்துலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணின் தற்கொலைக்குக் காரணமான சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில், முத்துலட்சுமி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது.
8 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், தனது மரணத்திற்கு இந்த 3 பேர்தான் காரணம் என்றும், அவர்கள் மிரட்டிப் பறித்த பணத்தின் விவரங்கள் மற்றும் தமக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் குறித்தும் அவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



