கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வதி அச்சு (39) என்ற இளம்பெண், ‘ஹனிடிராப்’ (Honeytrap) என்னும் வலையை விரித்து 300-க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி, வீடியோக்களை எடுத்துக் கொண்டு லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் குறிவைத்து இவர் பல தந்திரங்களை மேற்கொண்டதாகவும், 2.5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தித் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள போவார் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஓய்வூதியர் ஒருவரே அஸ்வதியின் சமீபத்திய இலக்கு.
மனைவியை இழந்த தனிமையில் இருந்த அந்த முதியவருக்கு, திருமணப் புரோக்கர்கள் மூலம் அஸ்வதி அறிமுகமாகியுள்ளார். “என் கடன்களைத் தீர்க்க நீங்கள் உதவினால் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று போலி வாக்குறுதி அளித்து, அந்த முதியவரிடம் இருந்து ரூ. 40,000 பெற்றுள்ளார். ஆனால், பணம் கிடைத்தவுடன் அஸ்வதி முதியவரின் அழைப்புகளைத் தவிர்த்ததுடன், நேரில் வந்தபோது அவரைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
பணத்தைத் திருப்பித் தருவதாக போலீஸ் விசாரணையின்போது உறுதியளித்தும், அவர் அதனை நிறைவேற்றவில்லை. இதைத் தொடர்ந்து, போவார் போலீசார் அஸ்வதியை அவரது வீட்டில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். இது அஸ்வதியின் முதல் கைது என்றாலும், 2020 ஆம் ஆண்டு முதலே இவருக்குக் கிரிமினல் வரலாறு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொல்லம் கிராமப்புற போலீஸ் சார் ஆய்வாளர் ஒருவர் அளித்த புகாரின்படி, இவர் பல போலீஸ் அதிகாரிகளை ஹனிடிராப் வலையில் சிக்க வைத்துப் பணம் பறித்துள்ளார். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவர் இவ்வளவு காலம் தப்பி வந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அஸ்வதி, தன்னை ஒரு மருத்துவராக அல்லது தொழில்முறைப் பெண்ணாக போலி அடையாளங்களில் அறிமுகப்படுத்திக் கொண்டு, திருமண வாக்குறுதியைக் கொடுத்து முதியவர்களை ஏமாற்றுவதை ஒரு தொழிலாகவே மாற்றியுள்ளார். ஒரு வழக்கில், மாவேலிக்கரை பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து மட்டும் ரூ. 5 லட்சம் ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது அஸ்வதி திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



