கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் அசோக் நகர் பகுதியில் உள்ள தோல் சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர்.
தோல் ஒவ்வாமை சிகிச்சைக்காக 21 வயதுடைய அந்த இளம்பெண் தனியாக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், பரிசோதனை என்ற பெயரில் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார். கிளினிக்கில் வேறு நோயாளிகள் யாரும் இல்லாத தனிமையை பயன்படுத்திக் கொண்ட அந்த மருத்துவர், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணின் ஆடைகளை களையச் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இளம்பெண்ணை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என அத்துமீறி நடந்ததாகவும், அதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அந்த மருத்துவர் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் இந்த கொடுமையை அனுபவிக்க நேரிட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார். அத்துடன், “உன்னுடன் நேரம் செலவிட வேண்டும், ஹோட்டலில் ரூம் போடவா” என்று அந்த மருத்துவர் கேட்டதாகவும் இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கமாகத் தன் தந்தையுடன் கிளினிக்கிற்கு செல்லும் அந்தப் பெண், அன்று மட்டும் தனியாக சென்றதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிளினிக்கில் இருந்து வெளியேறிய இளம்பெண் வீட்டுக்குச் சென்று தன் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிளினிக்கிற்கு வந்து மருத்துவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தான் சிகிச்சை மட்டுமே அளித்ததாகவும், வேறு எந்த தவறும் செய்யவில்லை என்றும் மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய நடவடிக்கைகளை அந்த இளம்பெண் தவறாக புரிந்துகொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும், அசோக் நகர் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணைக்குப் பிறகு, மருத்துவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



