தூத்துக்குடி மாவட்டம், தாமரை மொழிப் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினரைக் கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஒருவரை, பழிவாங்கும் நோக்கில் ஒரு கும்பல் சினிமா பாணியில் காரை மோதி வீழ்த்தி, சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ
தாமரை மொழிப் பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் (34) என்பவர், தனது உறவினரான கந்தையா (48) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தனது அண்ணன் சின்னதுரை என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர்கள் வேப்பங்காடு பகுதிக்கு வந்தபோது, பின்னால் வேகமாக வந்த ஒரு கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து அரிவாளுடன் இறங்கிய ஒரு கும்பல், சிவசூரியனை நோக்கி ஓடி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசூரியன் உயிர்தப்பிக்க ஓடத் தொடங்கினார். இருப்பினும், அந்தக் கும்பல் விடாமல் துரத்திச் சென்று சிவசூரியனை சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இதை தடுக்க முயன்ற அவரது அண்ணன் சின்னதுரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த சின்னதுரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததுடன், சிவசூரியனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
முதலில் கொலை செய்யப்பட்ட கந்தையா, சுப்புலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து தினமும் துன்புறுத்தியதால், அவர் பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வாழ்ந்த நிலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பின்னர், சிவசூரியனின் அக்காவான மணியம்மாளை கந்தையா 2-வதாக திருமணம் செய்துள்ளார். அவரிடமும் சண்டை போட்டு பிரிந்துள்ளார். சிவசூரியன் பலமுறை கெஞ்சியும் கந்தையா மணியம்மாளுடன் வாழ மறுத்து தகராறு செய்த நிலையில், மணியம்மாளும் சில நாட்களிலேயே உயிரிழந்தார்.
பின்னர், கந்தையா 3-வதாக இசக்கித்தாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவசூரியன் கந்தையாவைக் கொலை செய்துள்ளார். இந்தக் கொலைக்கு பழிவாங்கும் நோக்குடனேயே, இப்போது கந்தையாவின் அக்கா மகன்களே சிவசூரியனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது



