திருட்டு புகாரில் இளைஞர் அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் திருட்டு புகார் வந்திருப்பது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், திருப்புவனம் கோயிலில் மீண்டும் திருட்டு புகார் எழுந்துள்ளது. கோயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பை மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மூன்று பேர் அறநிலையத்துறையில் திருட்டு புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.