கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), நாடு தழுவிய விமான நிலைய பாதுகாப்பு தணிக்கையை தொடங்கியுள்ளது. இது மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட, DGCA அறிக்கையின்படி, அகமதாபாத் விபத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் ஆபத்தான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மங்கிபோன ஓடுபாதை அடையாளங்கள், தேய்ந்துப் போன விமான டயர்கள், காலாவதியான சுமுலேட்டர் அமைப்புகள் மற்றும் தரைவழி வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு மீறல்கள் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.
கூட்டு இயக்குநர் ஜெனரல் மேற்பார்வையின்கீழ் 2 DGCA குழுக்கள், கடந்த 19ம் தேதி முதல் பல்வேறு விமான நிலையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த குழுக்கள் பகல் மற்றும் இரவு நடவடிக்கைகளை உள்ளடக்கிய 7 முக்கிய அளவுருக்களை மதிப்பீடு செய்தன. சோதனையில், விமான செயல்பாடுகள், சாய்வுதள பாதுகாப்பு, ATC செயல்பாடுகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் விமானத்திற்கு முந்தைய பராமரிப்பு முறைகள் பற்றி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் தரையிறங்கும்போது கட்டிடத்தில் மோதி ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளான பிறகு உடனடியாக சோதனை தொடங்கப்பட்டது. பாதுகாப்பு அபாயங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும் என்று DGCA-வின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய குறைபாடுகள்: பல விமான நிலையங்களில் பாதுகாப்பான புறப்பாடு மற்றும் தரையிறக்கங்களுக்கு முக்கியமான கட்டிடங்கள் மற்றும் கோபுரங்கள் போன்ற சுற்றியுள்ள தடைகள் பற்றிய தரவு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படவில்லை.
ஒரு விமான நிலையத்தில், தேய்ந்துபோன டயர்கள் காரணமாக தரையிறக்கப்பட்ட உள்நாட்டு விமானத்தை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். தேய்ந்து போன டயர்கள் குறிப்பாக ஈரமான ஓடுபாதைகளில் பிரேக்கிங் செயல்திறனை குறைக்கின்றன. மேலும் கடுமையான சறுக்கல் சம்பவங்களுக்கும் வழிவகுக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் விமானங்கள் தரையிறங்கும்போதும் மற்றும் புறப்படும்போதும் வழிகாட்டும் ஓடுபாதையில் உள்ள மைய கோடு குறிகள் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது விமானம் மையத்தில் இருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும்.
தொழில்நுட்ப கோளாறுகள் பதிவு செய்யப்படவில்லை: விமான அமைப்புகளில் உள்ள கோளாறுகள் கட்டாய தொழில்நுட்ப கோளாறுகள் பதிவு செய்யப்படவில்லை என்பதை ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தனர். இதனால் விமானத்தில் மீண்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சிமுலேட்டர்களிடையே பொருத்தமின்மை: பைலட் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் சிமுலேட்டர் காலாவதியான மென்பொருளில் இயங்கி வந்தது. மேலும் அது சேவையில் உள்ள விமானத்தின் உள்ளமைவுடன் பொருந்தவில்லை. இது உண்மையான அவசரநிலைகளின் போது விமானிக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
பாதுகாப்பு அமைப்புகளில் பராமரிப்பு குறைபாடுகள்: த்ரஸ்ட் ரிவர்சர் மற்றும் ஃபிளாப் – ஸ்லாட் லீவர் லாக்ஸ் போன்ற முக்கிய அமைப்புகள் வழக்கமான பராமரிப்பின்போது பாதுகாக்கப்படவில்லை. தறையிறங்கும்போது அவசியமான இந்த வழிமுறைகள் தற்செயலாக நடுவானில் செயல்படுத்தப்பட்டால், விமானத்தை நிலைகுலையச் செய்யலாம்.
அதிவேகத்தில் தரை வழி வாகனங்கள்: விமான நிலைய சாய்வு பாதையில் இயங்கும் வாகனங்கள் வேக கட்டுப்பாடு கருவிகள் இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டது. இதனால் பல ஊழியர்களின் விமான பக்க வாகன அனுமதிகள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டன. சாய்வு பாதை ஒரு அதிக ஆபத்துள்ள பகுதியாகும். கட்டுப்பாடற்ற வாகனங்கள் விமானம் மற்றும் தரைவழிப் பணியாளர்களுக்கு கடும் மோதல் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: மாஸ் காட்டிய திருப்பூர் தமிழன்ஸ்!. பிளே ஆப்- சுற்றுக்கு முன்னேற்றம்!. கோவை கிங்ஸ் ஏமாற்றம்!