காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது..
அந்த வகையில் தற்போது நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார்.. இந்த திட்டத்தின் மூலம், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3,05,000 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்..
இந்த நிலையில், காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்து கிடந்ததை, நியாபகப்படுத்த விரும்புகிறேன்.
இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலையுணவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை. பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது விடியா அரசின் விழிகளுக்குப் புலனாகவில்லையா?
ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திராவிட மாடலின் சாதனையா? உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? அல்லது, போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா?” என்று குறிப்பிட்டுள்ளார்…