ஒரு காலத்தில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் தவித்த ஒரு நாடு, இன்று உலகிலேயே மிக குறைந்த உடல் பருமன் விகிதம் (வெறும் 4%) கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது என்றால் அது ஜப்பான் தான். மறுபுறம், இந்தியாவில் சுமார் 25 சதவீதத்தினர் உடல் பருமன் சிக்கலில் சிக்கித் தவிப்பதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு குடியேறிய பிரபல யூடியூபர் ஜோசப் எவரெட், ஜப்பானியர்களின் இந்த ஆரோக்கிய ரகசியத்தையும் இந்தியாவை போன்ற நாடுகள் எங்கே தவறவிடுகின்றன என்பதையும் சமீபத்தில் ஒரு காணொளி வாயிலாக பகிர்ந்துள்ளார்.
ஜப்பானியர்களின் ஆரோக்கியத்திற்கு முதல் காரணம் அவர்களின் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் உணவு தேர்வுகள்தான். அங்குள்ள கடைகளில் பொரிக்கப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக சாலட், வேகவைத்த முட்டைகள், க்ரில் செய்யப்பட்ட மீன் மற்றும் சர்க்கரை இல்லாத தேநீர் போன்றவையே மலிவான விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உலகிலேயே மிக குறைவாக பயன்படுத்தும் நாடாக ஜப்பான் திகழ்கிறது. ஆனால் இந்தியாவில், குறைந்த விலையில் வறுத்த உணவுகளும், சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களுமே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன.
ஜப்பானியர்கள் உணவின் அளவில் காட்டும் ஒழுக்கம் வியப்பிற்குரியது. வயிறு முட்ட சாப்பிடாமல், 80 சதவீத பசி அடங்கியதுமே சாப்பிடுவதை நிறுத்திவிடும் ‘ஹரா ஹச்சி பு’ என்ற முறையை அவர்கள் பின்பற்றுகின்றனர். இது செரிமானத்தை எளிதாக்கி, தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. மாறாக, இந்திய உணவு முறையில் சத்துக்களை விட உணவின் அளவும், அதிக கலோரிகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக, 2000-களின் தொடக்கத்தில் ஜப்பான் அரசு கொண்டு வந்த “மெட்டாபோ சட்டம்” (Metabo Law) ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சட்டத்தின்படி, 40 முதல் 74 வயதுக்குட்பட்ட குடிமக்கள் ஆண்டுதோறும் இடுப்பு அளவை பரிசோதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட (ஆண்களுக்கு 33.5 அங்குலம், பெண்களுக்கு 35.4 அங்குலம்) அதிகமாக இருப்பவர்கள், கட்டாய உணவு ஆலோசனைகளையும் உடற்பயிற்சி வழிகாட்டல்களையும் பெற வேண்டும். ஊழியர்களின் உடல்நலனைப் பேணுவது அந்தந்த நிறுவனங்களின் கடமை என சட்டம் வகுக்கப்பட்டுள்ளதால், ஜப்பானில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.



