பிரபல சமையல் கலைஞர் மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா எழுப்பியுள்ள திருமண மற்றும் கர்ப்பம் தொடர்பான சர்ச்சைக்கு, நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் சட்டத்தை மட்டுமே நம்புவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் சமையல் பணிகளை மேற்கொண்டுப் புகழ்பெற்ற மாதம்பட்டி ரங்கராஜை, ஜாய் கிரிஸில்டா திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கியதாகக் கூறி வருகிறார். இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரங்கராஜ் மறுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஜாய் கிரிஸில்டா அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேட்டி அளித்து, ரங்கராஜைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளும்படிப் பல தரப்பில் இருந்தும் தன்னை அணுகுவதாகக் குறிப்பிட்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜ், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படியே உண்மை நிலைநாட்டப்படும். நான் இந்தச் சர்ச்சையைச் சட்டப்படி எதிர்கொள்வதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்தப் பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. நடந்து வரும் இந்தச் சர்ச்சை குறித்து எந்தக் கருத்துகளையும் அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். திருமதி. ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது போல, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
Read More : தடை செய்யப்பட்ட மயக்க ஊசி செலுத்தி மனைவியை கொன்ற டாக்டர்..!! பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!