தவெக தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்றும், விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று விசிக வலியுறுத்தவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ கரூர் சம்பவத்தை வைத்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.. இது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.. தவெக தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.. விஜய்யை கைது செய்ய வேண்டும், சிறைப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தவில்லை.. கரூர் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.. அதற்கான எந்த வெளிப்பாடும் அவரின் நடவடிக்கைகளில் இல்லை என்ற அடிப்படையில் தான் எங்கள் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறோம்.. தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நேர்மையாக இந்த பிரச்சனையை அணுக வேண்டும். அவ்வாறு அணுகிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம்..
நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை அமைத்திருப்பதும், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்திருப்பதும் ஆறுதல் அளிக்கும் ஒன்றாக உள்ளது. இதுபோன்ற நெரிசல் சாவுகள் இனி தமிழ்நாட்டில் நடக்ககூடாது என்ற படிப்பினையை நாம் பெற வேண்டும்..
விஜய் அவர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் ஒரு பாடம் என்று விசிக கருதுகிறது” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பை வீச முயற்சி செய்துள்ளார்.. ஒரு கோயில் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்க முடியாமல் அவர் செருப்பை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தலைமை நீதிபதி மீது உள்ள வன்மம் தான் இதற்கு முக்கிய காரணம்.. சனாதனத்திற்கு எதிராக பேசுவதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்..
சனாதனவாதிக்கு ஒரு அம்பேத்கரியவாதி தலைமை நீதிபதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.. உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்தி தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக உள்ளது.. இதை கண்டித்து இன்று விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வேண்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : கரூர் துயரம்.. கைவிரித்த உயர்நீதிமன்றம்.. உச்சநீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு.. எப்போது விசாரணை?