கேரளாவின் கல்வி துறையில் மாற்றத்தைத் தூண்டும் வகையில் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய திரைப்படம் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுயாட்சி தேர்தலையும், சமூக அடையாள வேறுபாடுகளை நீக்கும் முயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், சினிமாவை தாண்டி கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
அந்த படத்தில் ஒரு வகுப்பறை காட்சி மிகுந்த கவனத்தை ஈர்த்தது. அந்த வகுப்பில் மாணவர்கள் அரை வட்டமாக அமர்ந்திருக்க, நடுவில் ஆசிரியர் இருந்தார். இதனால், மாணவர்கள் எல்லோரும் நேரில் ஆசிரியரைக் காண முடிகிறது, மாணவர்கள் இடையே நல்ல உரையாடலும், புரிதலும் ஏற்படுகிறது. இதே மாதிரியான வகுப்பறை அமைப்பு, தற்போது கேரளா மாநிலத்தின் 6 அரசு பள்ளிகளில் உண்மையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
முதலாவது கொல்லம் மாவட்டத்தில் உள்ள வலக்கம் ஆர்.வி.வி மேல்நிலைப்பள்ளியில் அமல்படுத்தப்பட்டது. இந்த பள்ளி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ்குமார் நிர்வகிக்கின்ற கல்வி நிறுவனமாகும். படத்தின் முக்கிய காட்சிகள் அமைச்சர் அவர்களுக்கு முன்னதாகவே காண்பிக்கப்பட்டு, அவருடைய விருப்பத்தின் பேரில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது என இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் தெரிவித்தார்.
இந்த வகுப்பறை முறை, 1994ம் ஆண்டில் மத்திய அரசு பரிந்துரைத்த கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தற்போது ஒரு திரைப்படத்தின் ஊடாக நடைமுறையில் வந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும், பல பள்ளிகள் இதனை தங்கள் வகுப்பறைகளிலும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் திரையரங்குகளில் குறுகிய நாட்களே ஓடியிருந்தாலும், ஓ.டி.டி. வெளியீட்டுக்குப் பின் பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கலைத்துறையின் சமூகப்பண்பை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Read more: விசிகவுக்கு புதிய பொதுச்செயலாளர்..? தலித் அல்லாத ஒருவருக்கு பதவி வழங்க திருமா முடிவு..!!