மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களின் பயணத்தைச் சுற்றி சர்ச்சை உருவாகியுள்ளது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று வரவேற்காதது மட்டுமல்லாமல், ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சில அடிப்படை வசதிகளிலும் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லாதது மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் சாலைகளில் குப்பைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டார்ஜிலிங் மாவட்டத்தில் 9வது சர்வதேச சந்தால் மாநாடு நடைபெற்றது. பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கலந்து கொண்டார்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் சில நடைமுறை குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக ஜனாதிபதி ஒரு மாநிலத்துக்கு வரும்போது ஆளுநர், முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்க வேண்டும். ஆனால் இம்முறை முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் வரவேற்பில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு குறுகிய பரப்பளவு கொண்ட மற்றொரு இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு செல்லும் சாலைகள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்பதும் விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்த நிகழ்ச்சி மக்கள் எளிதில் வர முடியாத இடத்தில் நடைபெறுகிறது. பழங்குடியின மக்களின் நலனில் மாநில அரசு போதுமான கவனம் செலுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு இளைய சகோதரியைப் போன்றவர்; நானும் வங்கத்தின் மகள் தான். இருப்பினும் இது பெரிய விஷயமல்ல, நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்” எனக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தையும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தையும் மதிக்கும் அனைவருக்கும் இது வேதனையளிக்கும் சம்பவம் என அவர் கூறினார். மேலும், ஜனாதிபதி பதவி அரசியல் எல்லைகளை தாண்டிய உயரிய பதவியாகும், அதன் மரியாதை காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதுமான வசதிகள் இல்லையென மாவட்ட நிர்வாகம் முன்பே எச்சரித்ததாக விளக்கம் அளித்தார். அந்த தகவல் ஜனாதிபதி அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், சிலிகுரியில் நடைபெற்ற மாநாட்டுக்கு தனியார் அமைப்பான சர்வதேச சந்தால் கவுன்சில் ஜனாதிபதியை அழைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், நடைமுறைகளின்படி சிலிகுரி மாநகராட்சி மேயர், டார்ஜிலிங் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று வழியனுப்பியதாகவும், இதில் எந்த வித நெறிமுறை மீறலும் இல்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார். பாஜக அரசியல் நோக்கத்திற்காக இந்த விவகாரத்தை பெரிதாக்குகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் நான்கு முக்கிய அம்சங்களை குறித்து விளக்கம் கோரியுள்ளது.
1.ஜனாதிபதியை வரவேற்க முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் ஏன் வரவில்லை?
2.ஜனாதிபதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லாததற்கு காரணம் என்ன?
3.நிகழ்ச்சி நடைபெறும் பாதையில் குப்பைகள் இருந்தது ஏன்?
4.இந்த குறைபாடுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இந்த விவகாரம் தற்போது மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே அரசியல் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.



