திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவைச் சேர்ந்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (33). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஜுனா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில், சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் பேசிவிட்டு, வீட்டருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சுரேஷ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், திடீரென அரிவாளை எடுத்து சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். அதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் சுரேஷின் தலையைத் துண்டித்து எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சுரேஷ் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக, பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளையும், துண்டிக்கப்பட்ட சுரேஷின் தலையையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.



