தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘டிட்வா’ (Titwa) புயல் வலுவிழக்கும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், இன்று இரவு நேரத்தில் புயல் சென்னைக்கு மிக அருகில் வரும்போது, அது மேலும் வலு குறைந்து வெறும் தாழ்வு மண்டலமாக மட்டுமே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் மையப்பகுதி கடலில் நீடித்தாலும், அதன் வெளிப்புறச் சுற்றுப்பகுதி தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மீது படர்ந்து இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக மழைப்பொழிவு நாளை (திங்கட்கிழமை) வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



