பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக நடக்கும் கூட்டம் இதுவாகும்.. பொதுக்குழு கூட்ட மேடையில் அன்புமணி உட்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தது.. ஆனால் அவர் வராததால் அந்த இருக்கை காலியாக இருந்தது.. மேலும் நிறுவனர் ராமதாஸுக்கும் தனி இருக்கை போடப்பட்டிருந்தது.. ராமதாஸ் வழியில் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம், அதற்குள் எல்லோரும் ஒன்றுபடுவோம் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது..
இந்த பொதுக்குழுவில் பாமக உட்கட்சி தேர்தலை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்ற தீர்மானமும் நிறைவெற்றப்பட்டது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அறிவிக்காவிட்டால் அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது..
இந்த பொதுக்குழுவில் பேசிய அன்புமணி, வரும் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார்.. மேலும் “ நமக்கு இரண்டு இலக்கு இருக்கிறது.. ஒன்று யார் வர வேண்டும்? யார் வரக்கூடாது ? என்பது தான்.. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.. மெகா கூட்டணியை அமைத்து நாம் ஆட்சிக்கு வருவோம்.. ஒரு சில காத்தில் இது நடக்கும்..” என்று தெரிவித்தார்..
தனது தந்தை உடனான மோதல் குறித்து பேசிய அவர் “ நேற்று நீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு வந்தது.. எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை.. மனதில் வலியோடு தான் அந்த தீர்ப்பை எதிர்கொண்டேன்.. யாரை எதிர்த்து அந்த தீர்ப்பு.. நமக்குள்ளேயே எதிர்த்து ஒரு தீர்ப்பா? இது எனக்கு வெற்றி இல்லை.. இது நம்ம குடும்பம்.. சாமிக்கு கோபம் வரும்.. இப்போது சாமிக்கு கோபம் வந்துவிட்டது.. பூசாரிக்குள் தற்போது சண்டை..” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ராமதாஸ், சொல்வதற்கு தற்போது ஏதும் இல்லை என்று தெரிவித்தார்..
இதனிடையே அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று ராமதாஸ் தரப்பு பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் தெரிவித்துள்ளார்.. மேலும் “ ராமதாஸை விட பதவி பெரியதல்ல.. இட ஒதுக்கீட்டிற்காக வாழ்வையே அர்ப்பணித்தவர்.. பொதுக்குழு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி தரவில்லை.. தடையும் விதிக்கவில்லை.. மே 28-ம் தேதி அன்புமணியின் பதவிக்காலம் முடிந்தது.. அதன்பின் ராமதாஸ் தான் கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்..” என்று தெரிவித்தார்.
Read More : அன்புமணியே தலைவராக தொடர்வார்.. ராமதாஸ் இல்லாமல் நடக்கும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம்..