தொழில்நுட்ப உலகில் தற்போது ‘ஏஐ’ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், கற்பனை செய்து பார்க்க முடியாத வேகத்தில் வளர்ந்து வருகின்றன. மனிதர்களால் பல மணி நேரம் செலவழித்து செய்யப்படும் சிக்கலான வேலைகளை, சில நிமிடங்களிலேயே துல்லியமாக செய்து முடிக்கும் ஏஐ-ன் ஆற்றல், பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இது ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘ஒயிட் காலர்’ (White-collar) எனப்படும் அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த சூழலில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவுத் தலைவரான முஸ்தபா சுலைமான் வெளியிட்டுள்ள தகவல், சர்வதேச அளவில் பணியாற்றுபவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கணித்துள்ளார். குறிப்பாக, கணினி முன் அமர்ந்து மூளை உழைப்பைச் செலுத்தும் பணியாளர்கள் இந்த மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட வாய்ப்புள்ள துறைகள் :
சட்டம், கணக்கியல் (Accounting), மார்க்கெட்டிங் மற்றும் திட்ட மேலாண்மை (Project Management) போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களின் அன்றாட வேலைகளில் பெரும்பகுதியை, வரும் நாட்களில் ஏஐ கருவிகளே தானியங்கி முறையில் (Automated) செய்து முடிக்கும். மனிதர்கள் செய்யும் பணிகளைவிட ஏஐ கருவிகள் மிக துல்லியமாகவும், வேகமாகவும் முடிவுகளை எடுக்கும் என்பதால், நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களை நோக்கி திரும்புவது வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் சரிவை உண்டாக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி :
ஏற்கனவே பணிநீக்கங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலையால் தவித்து வரும் ஐடி ஊழியர்களுக்கு, முஸ்தபா சுலைமானின் இந்த அறிக்கை மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், ஏஐ-க்கு ஈடுகொடுக்கும் வகையில் ஊழியர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமே இப்போதைக்கு இருக்கும் ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது.
Read More : வீடுகளில் நாய் வளர்த்தால் ரூ.5,000 அபராதம்..!! வீடு வீடாக சென்று ஆய்வு..!! சென்னை மாநகராட்சி அதிரடி..!!



