மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவின் டி.எஸ்.பி சுந்தரேசன், அலுவலக வாகனம் இல்லாமல் நடந்தே பணிக்குச் சென்ற வீடியோ வைரலான நிலையில், நேர்மையாக இருப்பதால் தான் தனக்கு இத்தனை சிக்கல் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கிலும், பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான என்கவுன்டரிலும் விசாரணை செய்ததற்குப் பின்னர், சுந்தரேசன் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளச்சாராயம், மதுபான கடத்தல், சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தவர். 23 டாஸ்மாக் பார்கள் சீல் வைக்கப்பட்டதோடு, 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான், டி.எஸ்.பி. சுந்தரேசனின் நான்கு சக்கர அலுவலக வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. முன்னர் அமைச்சரின் பாதுகாப்புக்குச் செல்ல சுந்தரேசன் வாகனத்தைக் கேட்டும், மாவட்ட காவல்துறை அவருக்கு வாகனத்தை தர மறுத்துள்ளது.
இதையடுத்து, சில நாட்கள் தனது இரு சக்கர வாகனத்தில் சுந்தரேசன் பணிக்குச் சென்று வந்தார். இந்தச் சூழலில், தனது வீட்டிலிருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு அவர் நடந்தே சென்றார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி சுந்தரேசன், “நான் சம்பளத்தில் மட்டுமே வேலை செய்கிறேன். ஆனால் மார்ச் மாதம் முதல் எனக்கு சம்பளம் போடவில்லை. நான் ஏற்கனவே VRS (விருப்ப ஓய்வு) கேட்டு மனு அளித்திருந்தேன். எந்த குற்றச்சாட்டும் இல்லாததையும் மூன்று துறைகள் உறுதி செய்துள்ளன. ஏப்ரல் மாதத்துடன் வேலையை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தேன். ஆனால் மாவட்ட எஸ்பி திடீரென அழைத்து, பிறகு தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். என்னை சஸ்பெண்ட் செய்ய முயற்சி செய்கிறார்கள். என்னை சஸ்பெண்ட் செய்தாலும் கவலை இல்லை.. உண்மை ஜெயிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
என்னை இங்கு மாற்றியவர் எஸ்பி, ஒரு காவல் ஆய்வாளர். அவர் காவல் ஆய்வாளராக இருக்கத் தகுதி இல்லாதவர். ADGP, IG, SP மூவரும் சேர்ந்து இது எவ்வளவு பெரிய பிரச்சனையென புரிந்து கொள்ள வேண்டும். எதுவும் தெரியாமல் பேசவில்லை. இந்த அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறிய அவர்,
இன்னும் பல போலீசாரும் இதேபோல் கொடுமை அனுபவித்து வருகிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் எனது அலுவலகம் மோசமான நிலையில் உள்ளது. கழிவறை கூட கிடையாது. நான் கஷ்டப்படுகிறேன் என்பதற்காக எஸ்.ஐ., ஒருவர் தனது வீட்டில் இருந்த ஏசியை கொடுத்தார். அதுவும் பழைய ஏசி தான். எஸ்.பி., நேற்று என்னை அழைத்து, ‘ சுந்தரேசன் எனக்கும் உங்களுக்கும் எந்த வித பிரச்னையும் கிடையாது. உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்குமாரும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யும் தான் உங்களை ‘டார்ச்சர்’ செய்ய சொல்கின்றனர்’ என கூறுகிறார். இது எந்தவிதமான நியாயம்? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.