குலசாமி என்று கூறிக்கொண்டே நெஞ்சில் குத்திவிட்டார்கள் என்றும் என்னை நடைபிணமாக மாற்றிவிட்டார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “ அன்புமணி உடனான சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது.. எனக்கும் செயல்தலைவருக்குமான பிரச்சனை முழுவதுமாக உங்களுக்கு தெரியாது. பஞ்சாயத்துக்கு வந்த 16 பேரும் ஒரே தீர்ப்பை வழங்கினார்கள்.
நான் இங்கே இருந்து கட்சியை வளர்ப்பது, அன்புமணி மக்களை சந்திப்பது என்று முடிவானது. அன்புமணி என்னை நம்ப முடியாது என்று கூறிவிட்டார். தலைவர் பதவியை விட்டுத்தர தயாராக இருப்பதாக மாநாட்டிற்கு முன்பு கூறினேன். அமைதி காத்திருந்தால், அன்புமணிக்கு தலைவர் பதவி தானாக கிடைத்திருக்கும்.. அன்புமணியின் நிலைப்பாடு, நீயா நானா பார்த்துவிடுவோம் என்ற நிலைக்கு என்னை தள்ளியது. பேரன், பேத்திகளை பார்த்துக்கொண்டு கேட்டை சாத்திக் கொண்டு வீட்டில் என்னால் இருக்க முடியாது.. தொடர்ந்து செயல்படுவேன்..
ஆனால் குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். அன்புமணி என்னை நடை பிணமாக்கி நாடு முழுவதும் என் பெயரில் நடைபயணம் செய்ய உள்ளனர்.. 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது. ஒவ்வொரு செங்கலாக கட்டிய பாமக மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை வெளியே தள்ளுகிறார். இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சிக்கு தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா? தலைவராக நீடிக்க உரிமை இல்லையா என்று கேட்பதே எனக்கு அவமானமாக உள்ளது.
என்னை தொலைபேசியில் அழைத்து பேசி மானபங்கம் செய்துவிட்டார்கள்.. பாமகவை விட்டே என்னை நீக்க நினைக்கிறார்கள். என் கண்விரலைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன்.. உயிருள்ள என்னை உதாசீனப்படுத்திவிட்டு, உருவப்படத்திற்கு உற்சவம் செய்கின்றனர்.. நமது குடும்ப பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்பதை மீறி சௌமியாவை போட்டியிட செய்தார் அன்புமணி.. என்னுடன் சமரசம் பேசிய 2 பேரும் அன்புமணி உடன் பேசிய போதும் நல்ல பதில் வரவில்லை. அன்புமணி உடனான பேச்சுவார்த்தை தோல்வி என்று தான் நினைக்கிறேன்.. எங்கள் பிரச்சனையின் பின்புலத்தில் யாரும் இல்லை.. ஏனெனில் அன்புமணி யார் சொன்னாலும் கேட்கமாட்டார். அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. கட்சியை வளப்படுத்துவதற்கு உழைக்க அன்புமணி தயாராக இல்லை..” என்று தெரிவித்தார்.
Read More : என் குடும்ப பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என சொன்னேன்.. செளமியா என் பேச்சை மதிக்கல..!! – ராமதாஸ் குற்றசாட்டு